பட்டினத்துப் பிள்ளையார் அருளியது
பதினோராம் திருமுறை
1. கோயில் நான்மணிமாலை
வெண்பா
810
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.
1
கட்டளைக் கலித்துறை
811
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே.
2
விருத்தம்
812
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
    கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்
    விரிசடையும் வெண்ணீரும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
    உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்
எளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்
    டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
3
அகவற்பா
813
உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாண நீடு .........(5)

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில் ....(10)

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் ......(15)

வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் .......(20)

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் (25)

கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.
4
வெண்பா
814
ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.
5
கட்டளைக் கலித்துறை
815
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.
6
விருத்தம்
816
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
    நாயகரே நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
    செல்வரே உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
    என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
    தஞ்சுண்டா யங்கருந்தீ நஞ்சுண் டீரே.
7
அகவற்பா
817
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கு யாம்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி .....(5)

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று .........(10)

எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
8
வெண்பா
818
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண் டின்பான நான்.
9
கட்டளைக் கலித்துறை
819
நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம்
கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.
10
விருத்தம்
820
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு
    சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு
    பண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்
    நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
    அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதலெ திரின்று வரையுமே.
11
அகவற்பா
821
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்
கடல்தட வாக மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் .....(5)

ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பெளவம் ஏழே பட்டது பெளவத்தோடு
உலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் .....(10)

உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து .....(15)

அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய ........(20)

பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு .........(25)

அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்த தெந்தை வளையாது
கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை ........(30)

மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ..........(35)

செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும் .........(40)

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் .........(45)

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே.
12
வெண்பா
822
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்
துழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.
13
கட்டளைக் கலித்துறை
823
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.
14
விருத்தம்
824
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
    நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள்
    அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர்
    மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர்
    சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே.
15
அகவற்பா
825
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி வினையெனும்
தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5)

புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா .....(10)

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர வணிந்த தெய்வ நாயக .....(15)

தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
16
வெண்பா
826
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.
17
கட்டளைக் கலித்துறை
827
சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே.
18
விருத்தம்
828
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில்
    ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
    வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
    தொடக்க நின்றவர் நடக்கநொந்
தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
    சிந்தை யாயொழிவ தல்லவே.
19
அகவற்பா
829
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ....(5)

அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ....(10)

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்
பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் .......(15)

கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர் .........(20)

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்
சேயுயர் அகலத் தாயிரங் குடுமி ..........(25)

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு ........(30)

உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற் கரியதும் உண்டோ
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.
20
வெண்பா
830
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதைக் குழாம்.
21
கட்டளைக் கலித்துறை
831
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத்
தாதைதன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்இன்று கொல்லஎண்ணி
ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியே.
22
விருத்தம்
832
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன
    நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்
    புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில்
    கருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ்
இலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடி
    வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.
23
அகவற்பா
833
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக் ......(5)

கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10)

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஓயாது
உருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15)

கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20)

வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25)

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30)

நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர் .......(35)

அம்பலத் தாடும் உம்பர் நாயகனே.
24
வெண்பா
834
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை
மென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.
25
கட்டளைக் கலித்துறை
835
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே.
26
விருத்தம்
836
என்னாம் இனிமட வரலாய் செய்குவ
    தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
    அரனார் திருமுடி அணிதாமம்
தன்னால் அல்லது தீரா தென்னிடர்
    தகையா துயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
    வீசா நின்றது பேசாயே.
27
அகவற்பா
837
பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ......(5)

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ......(10)

கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும்அஃ தறிதி யன்றே மாயப் .....(15)

பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் ........(20)

நன்மையிற் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் .............(25)

ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை
நுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ..........(30)

அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்றென இரங்கி ......(35)

மறவா மனத்து மாசறும் அடியார்க்கு
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
28
வெண்பா
838
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்
பிச்சியே நாளைப் பெறும்.
29
கட்டளைக் கலித்துறை
839
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்
றிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே.
30
விருத்தம்
840
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
    அன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக்
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
    கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே
    வாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
    கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.
31
அகவற்பா
841
அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்
புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் ...(5)

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மைய திதுவே இதனை .....(10)

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே அவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே என்றிவை .....(15)

கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றும்
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய ......(20)

மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலஎம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை .......(25)

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே ........(30)

நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே, அஃதான்று
நினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே .......(35)

நினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே
இனிநனி இரப்பதொன் றுடையம் மனம்மருண்டு
புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்
நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் ........(40)

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
32
வெண்பா
842
வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.
33
கட்டளைக் கலித்துறை
843
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே.
34
விருத்தம்
844
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
    மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ
டுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
    ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே
பிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும்
    பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும்
    மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
35
அகவற்பா
845
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை .....(5)

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ....(10)

தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத் தைவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கத்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் .....(15)

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் ........(20)

வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் .........(25)

நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது ........(30)

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பில்
இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் ........(35)

வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே.
36
வெண்பா
846
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.
37
கட்டளைக் கலித்துறை
847
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக் கன்புசெய்யா
மிண்டர்மிண் டித்திரி வார்எனக் கென்னினி நானவன்தன்
தொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே.
38
விருத்தம்
848
தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு
    சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட
    நலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி
மிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
    விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
    திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
39
அகவற்பா
849
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து
அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய .....(5)

செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி ....(10)

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல்விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ......(15)

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி .......(20)

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் ........(25)

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி .......(30)

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் ......(35)

சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40)

கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம்போற்றி
கூறுதற் கரியநின் ஏறு போற்றி .......(45)

ஏக வெற்பன் மகிழும் மகட் கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்
தாடும் நாடகம் போற்றி என்றாங்கு .........(50)

என்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
40
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

பட்டினத்துப் பிள்ளையார் அருளியது
பதினோராம் திருமுறை
2. திருக்கழுமல திருமும்மணிக்கோவை
அகவற்பா
850
திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூறு
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த ...(5)

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை ...(10)

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின் ....(15)

பொலிவினொடு மலர மறையோர்
கழுமல நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்கு
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்து ....(20)

உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
முதலில் காலம் இனிது வீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோவென் றழைப்பமுன் னின்று ....(25)

ஞான போனகத் தருள்அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யாரென
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன் என்றும் ...(30)

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
1
வெண்பா
851
அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.
2
கட்டளைக் கலித்துறை
852
ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.
3
அகவற்பா
853
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் ...(5)

தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் .....(10)

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து .....(15)

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் ......(20)

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்கு .......(25)

எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
4
வெண்பா
854
மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.
5
கட்டளைக் கலித்துறை
855
ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத்
தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்
தெளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே.
6
அகவற்பா
856
அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் ...(5)

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி ....(10)

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியும் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான்அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் .....(15)

வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை
தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே ....(20)

காலமும் சென்றது யான்இதன் மேலினி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் ......(25)

இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.
7
வெண்பா
857
கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.
8
கட்டளைக் கலித்துறை
858
தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய வோஎன் மனத்திருந்தும்
கழுவா மணியைக் கழுமல வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென் றால்ஓர் வசையில்லையே.
9
அகவற்பா
859
வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக .......(5)

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் .......(10)

காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை ......(15)

ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி ......(20)

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி .......(25)

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த தெந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ....(30)

ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றெனவே.
10
வெண்பா
860
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.
11
கட்டளைக் கலித்துறை
861
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே.
12
(பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில் கண்டவை. திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்.)
அகவற்பா
862
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும
கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன
கைவலம் நெல்லியங் கனியது போலச்
சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்தை
வரன்முறை பகர்ந்த திருமலர் வாய .....(5)

பவளவரை மீதில் தவளமின் என்னச்
செப்பரு மார்பணி முப்புரி நூல
பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்
பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்
மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ...... (10)

அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல
அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்
துங்க இதயத்தும் தங்கு பொற்பாத
துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்
அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ......(15)

சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்
சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்
பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்
காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ......(20)

அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி
னாடக மருவி நீடறை பெருதலின்
நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்
அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
மலையா சலமென நிலைசேர் மாட .......(25)

மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்
காழிமா நகரம் தூழிதே ரமர்ந்த
அமையா அன்பின் உமையாள் கொழுந
தெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ......(30)

பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்
மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
பரம்பரை தவறா வரம்பெரு குரவன்
மருளற இரங்கி அருளிய குறிஎனும்
நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ......(35)

மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த
நேசம் என்னும் வாசுகி கொளுவி
மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
பேரா இன்பச் சீர்ஆ னந்தம்
பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று .......(40)

ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு
பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்
பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி
என்னையும் தன்னையும் மறந்திட்
டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45)
13
வெண்பா
863
பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்
மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே
பூந்தராய் நாதரைநீ போற்று.
14
கட்டளைக் கலித்துறை
864
போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்
ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை
தூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்
கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே.
15
அகவற்பா
865
இன்றென உளதென அன்றென ஆமென
உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
பல்வித மாகச் சொல்வகைச் சமய
மாகிய பயம்பில் போகுதல் குறித்த
நிலையில் துறைபல நிலையுள துறைசில .....(5)

பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்
மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்
வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்
நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்
வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் .....(10)

ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்
காயமென அமைத்த மாயநா வாயில்
இருவினை என்ன வருசரக் கேற்றிக்
காமம் உலோபம் ஏமமா மோகம்
மிதமறு குரோதம் மதமாச் சரியமென் .....(15)

றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி
நெடுநீர் என்னப் படுநெடு நாணில்
தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி
அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்
தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் .......(20)

தானம் ஆதி யான தீவுகளிற்
செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
இவ்வா றியங்கும் அவ்வா றதனுள்
முன்பார் கால வன்பார் தாக்கத்
தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ...(25)

அக்கடல் நீருள் புக்கறி வழிவுழி
மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்
கடுநர கென்னும் படுகுழி அழுந்தி
உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்
இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ....(30)

முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்
ஓதா துணர்ந்த நாதா தீத
அருவுரு என்னும் பொருள்முழு துடையோய்
யாவரும் நின்வய மேவரப் புரிவோய்
கரையறும் இன்பப் புரைதவிர் நிமல .......(35)

சாந்தணி வனமுலை ஏந்திழை பாக
ஞானமா மணநிறை மோனமா மலரே
வித்தகம் பழுத்த முத்திவான் கனியே
பரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த
திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ...(40)

பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
பசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க
தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த
தீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும்
வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் .....(45)

ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்
மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்
கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் ....(50)

எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி
மேவிய பெரும ஆவி நாயகனே
கணபணக் கச்சைப் பணஅர வசைத்த
மட்டலர் புழுகணி சட்டை நாயகன்
எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ....(55)

வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்
தோணியே பற்றெனத் துணிந்து
காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே.
16
வெண்பா
866
கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான
வண்டேனுண் டேமகிழும் வண்டானேன் – பண்டே
அளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்
குளிர்சிவா னந்தமிலங் கும்.
17
கட்டளைக் கலித்துறை
867
கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்
வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்
கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்
அம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே.
18
அகவற்பா
868
ஆகுவா கனனைத் தோகைவா கனனை
உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை
ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே
கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே
இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே .......(5)

கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே
நிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே
துன்பமொன் றறியா இன்பவா ரிதியே
மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே
விறலரி பிரமன் பெறலரும் பொருளே .....(10)

சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த
ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்
சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்
நவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்
தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் .......(15)

இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப
நீலமே காரமும் கோலமார் குயிலும்
துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்
தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்
மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ......(20)

நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்
இனமெனக் கருதி மனமுவந் தணைத்த
உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்
கூறுபட நோக்கினர் வேறுபா டறியா
வளனொடு செறிந்த அளவிலா மாடத் ...(25)

துறைதரு கற்பு நிறைகுல மடவார்
அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்
குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்
நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்
தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ......(30)

பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்
சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்
இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்
வாரா மின்னும் தாரா கணமும் ...(35)

ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்
காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த
காழிநா யகனே வாழிபூ ரணனே
ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்
பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் ......(40)

ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்
ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்
மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த
காளிமச் சீருண நீள்இயற் கனக
மாமெனக் கூறும் தோமறு மொழியும் .......(45)

கருட தியானம் மருள்தப வந்தோர்
நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்
ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்
பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்
அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ....(50)

இயலும் பட்டாங் கயல்அல என்னல்
சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த
பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
திருவருட் செல்வம் பெருகுமா றுதவி
அளித்தருள் பேரின் பாகும் ....(55)

களித்திடும் முத்திக் காழிவான் கனியே.
19
வெண்பா
869
காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ
காழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட்
கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்
கொண்டனள்என் றன்னமே கூறு.
20
கட்டளைக் கலித்துறை
870
கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்
மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட
நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்
தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே.
21
அகவற்பா
871
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
எம்ம னோரின் இறந்துபிறந் துழலும்
மம்மரிற் பெரிய வானவர் குழுவை
மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்
வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ...(5)

புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
வாயிடைச் செருகித் தூயநீர் உதவி
அருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்
பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்
எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ....(10)

ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி
உறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்
கருதி முயலுந் திருவிலி போலவும்
இலகுவால் அரிசி உலைபெய எண்ணி
வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ....(15)

அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து
வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்
சித்தத் துன்னும் மத்தர் போலவும்
வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி
இம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா ....(20)

திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்
அன்னவா றெளியனும் உன்னிமதி மயங்கா
தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி
என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்
சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து ......(25)

நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்
பெருகிய அன்பென வருநீர் நிறைந்த
இதய வாவிப் பதுமமா மலரின்
குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்
கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ....(30)

தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்
றசைவற் றிருக்க இசையத் தருதி
நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்
உந்திய வன்ன உருமரு வுதலான்
மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ......(35)

இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்
வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்
ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்
நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்
பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ......(40)

முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்
வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்
கட்டா மரைபல மட்டார் தலினால்
அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .........(45)

இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்
எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே
கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே
சிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் ........(50)

ஆகமார் வனமுலை அணையும்
போகமார் இதழிப் பூங்கண் ணியனே.
22
வெண்பா
872
கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்
உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்
புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்
அகலுமே பாசவிருள் அன்று.
23
கட்டளைக் கலித்துறை
873
இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்
சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்
பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்
பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே.
24
அகவற்பா
874
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
முயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை ........(5)

உதிரம் என்னும் முதிர்சா றொழுக
நகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10)

பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களிகொள் கத்தூரி
நறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி
உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15)

நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்
முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20)

மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்
நாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும்
கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் ......(25)

உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30)

வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35)

ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி .......(40)

புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி
அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
பூதசா ரத்தனுப் பூத மகாதனு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45)

பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50)

புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்
மாசுகம் நீயுறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநா யகனே.
25
வெண்பா
875
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்
கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்
விடையாய் புகலி விமலா மவுன
விடையாய் பிறியா விடை.
26
கட்டளைக் கலித்துறை
876
விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்
படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்
சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ
விடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே.
27
அகவற்பா
877
விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி
குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் .....(5)

நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்
திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்
கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்
மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
பற்பல உதவுங் கற்பகத் தருவு ....(10)

நந்தா வளன்அருட் சிந்தா மணியும்
வாமமாம் மேனிய காம தேனுவும்
அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்
காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ......(15)

முனிவர் ஆசி நனிபல மொழியக்
கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்
கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற
முடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் ........(20)

அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்
இந்தி ராணி வந்தரு கிருப்பக்
கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்
செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த
பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் .....(25)

அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த
செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்
பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப
வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து .....(30)

பொற்றா துண்ணா முற்றா இன்பப்
பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்
நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி
எம்மால் எவையும் இயன்றன என்னச் .....(35)

செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்
திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி
வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40)

தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்
ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்
காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்
துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்
அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ......(45)

சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்
மறுவிலா நீல வரைகிடந் தென்ன
அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்
கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ......(50)

இந்திர சாலம் முந்துநீள் கனவு
வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை
நிலைபே றுடையது நின்னருட் செல்வம்
அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் .....(55)

அதனால்
எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி
மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த
அரமியம் அதனை விரிகுழை பொதுளி
அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் .....(60)

ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்
துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்
மொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்
பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் .......(65)

பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்
வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்
வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்
புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்
மல்லலங் காழி வளநகர் வாண .....(70)

குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே
உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண
அந்த மாதி முந்தையே தவிர்ந்த
அனாதி முத்த என்ஆதி நித்த
அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே .......(75)

அளவையின் அடங்கா தொளிர்சுக நேய
உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே
நலங்கனி பெரிய நாயகி
கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே.
28
வெண்பா
878
பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா
புணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்
கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா
வரைக்காசென் றான்அதற்கு மான்.
29
கட்டளைக் கலித்துறை
879
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க
ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்
ஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார்
தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே.
30
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

பட்டினத்துப் பிள்ளையார் அருளியது
பதினோராம் திருமுறை
3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
அகவற்பா
880
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ...(5)

ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி ....(10)

நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ...(15)

திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி ...(20)

அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் ....(25)

நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் ....(30)

பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவும் ....(35)

தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ...(40)

இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ...(45)

எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும் ...(50)

அரவும் மதியமும் விரவித் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து ...(55)

சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ...(60)

வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
இனையவண் ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒரு வயிற்றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க ...(65)

வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்கு
உலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் ....(70)

திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
1
வெண்பா
881
பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
மருதாஎன் பார்க்கு வரும்.
2
கட்டளைக் கலித்துறை
882
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே.
3
அகவற்பா
883
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியற் சாயல் ..(5)

மான்மற விழிக்கும் மானார் செல்வத்து
இடைமரு திடங்கொண் டிருந்த எந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரண புராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள் ...(10)

சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
நனந்தலை உலகத் தனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் ...(15)

தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
யாயுறு துயரமும் யானுறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
நீயல தறிகுநர் யாரே அதனால்
யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று .....(20)

உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா
உள்ளமொன் றுடைமை வேண்டும்அஃதன்றி
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று ......(25)

தானல தொன்றைத் தானென நினையும்
இதுஎன துள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப தெங்கனம் முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ இறைவ கற்பம் .....(30)

கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரைஎயிற் றுரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. ...(35)
4
வெண்பா
884
கண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.
5
கட்டளைக் கலித்துறை
885
கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல் லால்இதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே.
6
அகவற்பா
886
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது
உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி
ஆரா உண்டி அயின்றன ராகித் ....(5)

தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் னின்றுதன்ஏவல் கேட்கும்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் ......(10)

பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் ......(15)

மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் .........(20)

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் ........(25)

அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்து
இனிது மொழிந்தாங் குதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழந்து
இகமும் பரமும் இல்லை என்று .......(30)

பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து
யோசனை கமழும் உற்பல வாவியிற் .........(35)

பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக .........(40)

பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையா துன்அரு ளினைநினைந்து .......(45)

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்கு ....(50)

இடுவோர் உளரெனின் நிலையினின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி
ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ
மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்
பார்க்கும்நின் .......(55)

செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்
பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் ......(60)

நின்சீர் அடியார் தம்சீர் அடியார்க்கு
அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகிஅவர்
காற்றலை ஏவல்என் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன் .......(65)

றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே.
7
வெண்பா
887
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டந் தன்னுளே வந்து.
8
கட்டளைக் கலித்துறை
888
வந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே
சிந்திகண் டாய்அரன் செம்பொற் கழல்திரு மாமருதைச்
சந்திகண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திகண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.
9
அகவற்பா
889
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற ......(5)

மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று .....(10)

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி ....(15)

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் ......(20)

பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர ....(25)

எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக .....(30)

இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் ...(35)

பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவாது (40)

இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
10
வெண்பா
890
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
படமொடுங்கப் பையவே சென்றங் - கிடைமருதர்
ஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.
11
கட்டளைக் கலித்துறை
891
காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே.
12
அகவற்பா
892
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை ......(5)

முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்று
ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் .....(10)

பிரியா தொறுக்கும் பிணியோ தெரியாது
இன்னது யானென் றறியேன் என்னை
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம்
வரைத்தனி வில்லாற் புரத்தை அழல் ஊட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள் .......(15)

நுண்பொடி யாக நோக்கி அண்டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவழு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து ......(20)

சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த ...(25)

திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கை நாயகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும் ........(30)

நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே.
13
வெண்பா
893
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.
14
கட்டளைக் கலித்துறை
894
நாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்ல
லாமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச் செய் தார்ஒரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே.
15
அகவற்பா
895
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் .....(5)

பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட் டிமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை ....(10)

கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி ...(15)

மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை ...(20)

பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்கும் குமரன் தாதை
பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண ...(25)

நின்னது குற்றம் உளதோ நின்னினைந்து
எண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் ...(30)

பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்து ...(35)

ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று
தேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப ...(40)

வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த் திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.
16
வெண்பா
896
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.
17
கட்டளைக் கலித்துறை
897
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற்
தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப்
போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே.
18
அகவற்பா
898
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக ......(5)

வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் ...(10)

கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவரும் ....(15)

காடும் மலையும் புக்குக் கோடையிற்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் ...(20)

சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் ......(25)

தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் ...(30)

செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்தும்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் ...(35)

வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் ...(40)

பட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென ...(45)

அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப
ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப ...(50)

அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட
உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர ...(55)

வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்கு
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்துமிட் டமைத்த ...(60)

இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் ....(65)

அறுசுவை அடிசில் வறிதினி தருந்தாது
ஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் .......(70)

ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த ...(75)

முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லேபோல் ...(80)

நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.
19
வெண்பா
899
நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ
பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.
20
கட்டளைக் கலித்துறை
900
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில் லார்இப் பிறப்பினில்வந்
தளையார் நரகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே.
21
அகவற்பா
901
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் ...(5)

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
உறுப்பினின் றெழுதரும் உள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல் ........(10)

துண்டத் துளையிற் பண்டை வழியன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்
தானே யாகி நின்ற தத்துவ
தோற்றவ தெல்லாம் தன்னிடைத் தோற்றி .....(15)

தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்விரி கண்டத் தேக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க ......(20)

உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத் தென்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் ....(25)

கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்
கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் ..(30)

தண்ட லாளர் மிண்டிவந் தலைப்ப
உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாது
இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் ....(35)

பாவப் பகுதியில் இட்டுக் காவற்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக் குழன்று ....(40)

பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்
பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி ....(45)

ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு ....(50)

என்னையும் அடிமை யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்து
இச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. ...(55)
22
வெண்பா
902
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
தெங்கே இருக்க இவள்.
23
கட்டளைக் கலித்துறை
903
இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும்
நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவெட்டாத்
திருக்கும் அறுத்தைவர் தீமையும் தீர்த்துச் செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே.
24
அகவற்பா
904
சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடைஉகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும் ...(5)

கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் ....(10)

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர .....(15)

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணில் கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் ......(20)

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவில தாயினும்
என்றன் வாயிற் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லற் படுத்தாது ......(25)

எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்பவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் .......(30)

அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.
25
வெண்பா
905
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.
26
கட்டளைக் கலித்துறை
906
அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரம்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோள்இரண் டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
27
அகவற்பா
907
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்
செவ்வான் உருவிற் பையர வார்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத .....(5)

மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கைலாய வாண கெளரி நாயக
நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து .......(10)

பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர்த் தாங்கும் குமர வேளும்
சுரிசங் கேந்திய திருநெடு மாலும் .......(15)

வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் .......(20)

செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் .....(25)

எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் ......(30)

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வத் தவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ......(35)

ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும் .....(40)

வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத் தொருதனிக் கிடந்த ......(45)

தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் ........(50)

காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும் .......(55)

இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் .....(60)

வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல கனைத்தும் நன்மை தீமை
ஆனவை நின்செயல் ஆதலின்
நானே அமையும் நலமில் வழிக்கே. ........(65)
28
வெண்பா
908
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
29
கட்டளைக் கலித்துறை
909
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றும் இல்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி யாம்தெய்வத் தாமரையே.
30
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

பட்டினத்துப் பிள்ளையார் அருளியது
பதினோராம் திருமுறை
4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
910
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே.
1
911
ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப்
போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய்
நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே.
2
912
தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே.
3
913
தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர்
ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள்
தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே.
4
914
பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே.
5
915
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே.
6
916
வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே.
7
917
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே.
8
918
மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்கள்என் றார்வெளிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே.
9
919
தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே.
10
920
தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே.
11
921
பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே.
12
922
வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே.
13
923
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே.
14
924
அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம்
பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே.
15
925
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே.
16
926
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே.
17
927
அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே.
18
928
அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே.
19
929
சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே.
20
930
வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்திசை மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே.
21
931
திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே.
22
932
பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே.
23
933
பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற
தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே.
24
934
தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே.
25
935
இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத்
தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே.
26
936
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே.
27
937
புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே.
28
938
உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே.
29
939
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக்
குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.
30
940
நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே.
31
941
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள்
உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே.
32
942
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி
பத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே.
33
943
அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு
அம்பரம் கொள்வதோர் வேழத் துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே.
34
944
துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத்
தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே.
35
945
அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே.
36
946
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம்
தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே.
37
947
கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே.
38
948
தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே.
39
949
மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட்
டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும்
நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே.
40
950
காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம்
தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே.
41
951
தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே.
42
952
உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே.
43
953
அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே.
44
954
தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே.
45
955
கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே.
46
956
நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம்
இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே.
47
957
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக்
கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே.
48
958
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே.
49
959
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்
டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர்
படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற்
படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே.
50
960
பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே.
51
961
இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல்
கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே.
52
962
கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே.
53
963
தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள்
மாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே.
54
964
நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே.
55
965
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே.
56
966
மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே.
57
967
பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே.
58
968
இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே.
59
969
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆருர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே.
60
970
நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர்
புனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே.
61
971
நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே.
62
972
சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே.
63
973
நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால்
அலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே.
64
974
ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே.
65
975
வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம்
ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே.
66
976
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே.
67
977
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி
விள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே.
68
978
பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிறை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே.
69
979
வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே.
70
980
நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே.
71
981
இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார்
நிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன்
உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே.
72
982
துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.
73
983
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும்
நென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர்
மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே.
74
984
உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே.
75
985
கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே.
76
986
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே.
77
987
சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே.
78
988
நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே.
79
989
உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட்
கொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே.
80
990
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே.
81
991
கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே.
82
992
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே.
83
993
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும்
நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே.
84
994
தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே.
85
995
உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே.
86
996
நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென்
றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே.
87
997
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே.
88
998
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே.
89
999
உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே.
90
1000
கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
91
1001
விடைபாய் கொடுமையெண் ணாதுமே< லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலின முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே.
92
1002
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே
சுழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே.
93
1003
முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை
உகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே.
94
1004
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.
95
1005
மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே.
96
1006
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே.
97
1007
இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.
98
1008
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே.
99
1009
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவே
போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
100
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

பட்டினத்துப் பிள்ளையார் அருளியது
பதினோராம் திருமுறை
5. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
அகவற்பா
1010
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே. ....(5)

மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே.
பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரந் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக் ...(10)

கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே
அணியுடை அல்குல் அவனிமண் டலமே
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே ...(15)

வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றுநின் தொழிலே ..(20)

அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே
என்றிவை முதலா இயல்புடை வடிவினோ
டொன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி ...(25)

அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ
டேழுல காகி எண்வகை மூர்த்தியோ
டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினிற் கூடிநின்று
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
1
1011
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவமும் ஆனாய் என்றும் ...(5)

திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும் ...(10)

இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகி
அடையப் பற்றிய பளிங்கு போலும் ...(15)

ஒற்றி மாநகர் உடையோய் உருவே.
2
1012
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் ....(5)

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் ......(10)

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர .....(15)

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.
3
1013
பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ....(5)

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் ...(10)

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.
4
1014
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினில் செய்வோய் எனினும் .....(5)

அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்தொறும் ......(10)

என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. ........(15)
5
1015
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யான்என அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் ....(5)

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நான்என நவிற்று மாறே ..(10)

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான்என மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யான்என உணர்த்திய வாறே
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் ......(15)

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருளும் நற்பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுலகினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் .......(20)

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்
காதி யாகிய அறுதொழி லாளர்
ஓதல் ஓவா ஒற்றி யூர
சிறுவர் தம் செய்கையிற் படுத்து .......(25)

முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே.
6
1016
அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத் திலைநீ எனினும் காதல் ...(5)

செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே, அஃதான்று .....(10)

பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை .....(15)

வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம் .....(20)

நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொல்நிலை சுருங்கின் அல்லது
நின்இயல் அறிவோர் யார்இரு நிலத்தே. ....(25)
7
1017
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப .....(5)

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப .......(10)

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக .......(15)

வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப
இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்
துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்
காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம் ...(20)

முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்
பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து ...(25)

மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனும் கடுவெளி அற்ற
தூமச் சோதிச் சுடர்க்குற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ... (30)

வாங்க யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.
8
1018
ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை ...(5)

கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே ...(10)

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது ....(15)

எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் ...(20)

துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து ...(25)

நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. ...(30)
9
1019
காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி ....(5)

இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனேபோற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி .......(10)

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் ......(15)

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி .....(20)

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை ....(25)

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com